493 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்ரமணியன்

வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் இதுவரை 493 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.

Update: 2021-10-05 13:41 GMT

அமைச்சர் மா. சுப்பிரமணியன்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு வார்டை பார்வையிட்ட பிறகு அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் தலை காட்ட தொடங்கியுள்ளது. எழும்பூர் மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்படுவதால் பல்வேறு இடங்களிலிருந்து இங்கு வருகின்றனர். ஆந்திராவிலிருந்து ஒரு குழந்தை எழும்பூருக்கு மேல் சிகிச்சைக்கு வந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கைவிடப்பட்ட குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இது வரை 493 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 41 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாரசிடாமல் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாநில பச்சிளங் குழந்தைகள் நல அதிகாரி சீனிவாசன் கூறுகையில், "குழந்தைகளுக்கு பாராசிடாமல் தவிர வேறு மருந்துகள் கொடுத்தால் பிளேட்லெட் ( தட்டணுக்கள்) குறையக்கூடும். தட்டணுக்கள் குறைந்துள்ளதா என்பதை ஐந்து நாட்களுக்கு பிறகு தான் கண்டறிய முடியும். ஆனால் முதல் இரண்டு நாட்களில் செய்யப்படும் பரிசோதனையிலேயே டெங்கு பாதிப்பாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே பாதிப்பு தீவிரமடையும் வரை காத்திருக்காமல் இரண்டாவது நாளிலேயே மருத்துவரை அணுகுவது அவசியம் என்றார்.

Tags:    

Similar News