தமிழகத்திற்கு மேலும் 3.76 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தது...
தமிழகத்திற்கு மேலும் 3.76 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 32 பாா்சல்களில் இன்று மாலை புனாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.;
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. பொதுமக்களும் ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா். இதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. எனவே தமிழ்நாடு அரசே நேரடியாக மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் பேசி, தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்து தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வரவழைக்கின்றன.
அந்த நிலையில் தமிழகத்திற்கு மேலும் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் 13 பாா்சல்களில் இன்று காலை 8.40 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து புளூ டாா்ட் கொரியா் விமானத்தில் சென்னை பழைய விமானநிலையம் வந்தடைந்தது.விமானநிலைய ஊழியா்கள் அந்த தடுப்பூசி பாா்சல்களை விமானத்திலிருந்து இறக்கி,தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனா்.அவா்கள் குளிா்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா்.
இந்நிலையில் இன்று மாலை 5.40 மணிக்கு புனேவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 3,76,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 32 பாா்சல்களில் சென்னை பழைய விமானநிலையம் வந்தன. விமானநிலைய லோடா்கள் அந்த தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா். அதில் 23 பாா்சல்களில் வந்த 2,76,000 டோஸ் தடுப்பூசிகள் தமிழக அரசிற்காக வந்தது.அதை விமானநிலைய அதிகாரிகள் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் குளிா்சாதன வாகனத்தில் ஏற்றி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் கொண்டு சென்றனா்.
மேலும் 9 பாா்சல்களில் வந்திருந்த ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று ஒரே நாளில் தமிழகத்திற்கு 4,36,000 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.