சென்னை விமான நிலையத்தில் மீண்டும் பயணிகள் வருகை அதிகரிப்பு

சென்னை விமானநிலையத்தில் மீண்டும் பயணிகள் வரத்து அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-02-16 12:37 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால், சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமானப்பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.கடந்த டிசம்பரில் நாள் ஒன்றுக்கு 180 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு,பயணிகள் எண்ணிக்கை 34 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை,ஒமைக்ரான் பீதி காரணமாக கடந்த ஜனவரி மாதம்,உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து,நாளொன்றுக்கு சுமாா் 10 ஆயிரம் பயணிகளே பயணித்தனா்.இதனால் பயணிகள் இல்லாமல் தினமும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு,சுமாா் 100 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறையும் தமிழ்நாடு அரசும் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை,ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளால்,ஜனவரி மாதம் இறுதியிலிருந்து,நோய் தொற்றுகள் வேகமாக குறையத்தொடங்கின.ஜனவரி தொடக்கத்தில் எவ்வளவு வேகமாக நோய் தொற்று பரவியதோ,அதைவிட வேகமாக அனைவரும் ஆச்சரியப்படத்தக்கவிதத்தில் நோய் தொற்றுகள் குறையத்தொடங்கியுள்ளன.

இதையடுத்து தமிழ்நாடு அரசு இரவு நேர ஊரடங்கு,ஞாயிறு முழு ஊரடங்கு,வெள்ளி,சனி,ஞாயிறு வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல தடைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ஜனவரி இறுதியிலிருந்து விலக்கிக்கொண்டது.தமிழ்நாட்டில் நோய் தொற்று தொடா்ந்து குறைந்ததையடுத்து, மேலும் பல்வேறு தளா்வுகளை தமிழ்நாடு அரசு கடந்த 2 தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளது.அதோடு மத்திய சுகாதாரத்துறை விமான பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை,7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் போன்றவைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.2 டோஸ் தடுப்பூசிகள் போட்ட சான்றிதழுடன்,எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி,விமான பயணிகள் பயணிக்கலாம் என்றும் விமான போக்குவரத்து துறையும் அறிவித்துள்ளது.

இதையடுத்து சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.கடந்த வாரத்தில்,10 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை, தற்போது 20 ஆயிரத்தை கடந்து 21 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.அதைப்போல் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 200 ஐ நெருங்குகிறது.இன்று ஒரே நாளில் 196 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சா்வதேச விமான சேவைகளை பொறுத்தமட்டில்,ஒன்றிய அரசு வழக்கமான விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது.அதனால் சிறப்பு விமானங்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு வருகை,புறப்பாடு கடந்த மாதத்தில் 20 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.இப்போது அது 54 சிறப்பு விமானங்களாக அதிகரித்துள்ளன.ஒன்றிய அரசு சா்வதேச விமான சேவைகளுக்கான தடையை நீக்கிய பின்பு,சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து,கடந்த 2020 ஜனவரியில் இருந்ததுபோல் 57 விமானங்கள்,வருகை 57 விமானங்கள் புறப்பாடு என்று நாள் ஒன்றுக்கு 114 விமானங்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது என்று விமானநிலைய வட்டாரத்தரப்பில் கூறப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை,ஒமைக்ரான் பரவல் வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு,சென்னை விமானநிலையத்தில் மீண்டும் பயணிகள் மற்றும் விமான சேவைகள் எண்ணிக்கைகள் பெருமளவு அதிகரித்துள்ளது விமான பயணிகள் மற்றும் விமான அதிகாரிகள் வட்டாரங்களில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

Tags:    

Similar News