அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உஷார் அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை
அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்காமல் தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வழங்கி கூடுதல் தொகையை வசூல் செய்வதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணமின்றி இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200க்கும் மேற்பட்ட சேனல்களை பொதுமக்களுக்கு ரூபாய் 140 (+GST) என்ற குறைந்த மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற நிறுவனங்களை விட மிகக் குறைந்த கட்டணம் ஆகும். அரசு கேபிள் டிவி சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்தந்த பகுதியில் சேவை வழங்கும் ஆபரேட்டர்கள் கேட்டுப்பெறலாம் அவ்வாறு பொது மக்களுக்கு அரசியல் சேவையை கேபிள் ஆப்பரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252911 மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம்.
மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தால் மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலும் அல்லது சந்தாதாரர் குடி பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றாலும் அல்லது தனியார் செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தினாலோ இந்நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட் அடாப்டர் ஆகியவற்றை அந்தந்த பகுதியில் உள்ள அரசு செட்டாப் பாக்ஸ் வழங்கிய அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்காக இந்நிறுவனத்திடமிருந்து செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக்கொண்டு அதை பொது மக்களுக்கு வழங்காமல் தங்கள் சுயலாபத்திற்காக தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்கி அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
ஆகவே தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு இவ்வாறு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை மூன்று மாதங்களுக்கு மேலாக செயலாக்கம் செய்யாமலும் அவ்வாறு செயலாக்கம் செய்யாத செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காத கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.