அரசியல் ஆதாயத்திற்காக வருமானவரி சோதனை, தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்

அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க அரசு வருமானவரி சோதனையை திமுகவினர் மீது நடத்துகிறது. இதனை தடுத்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஆர்.பாலு தலைமை தேர்தல் கமிஷ்னர் சுனில்அரோராவிடம் புகார் தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Update: 2021-04-02 13:30 GMT

திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டிலும், அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் வீட்டிலும், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இதுகுறித்து பேசிய மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,

திமுகவினர் மீது களங்கம் சுமத்தி தேர்தல் ஆதாயம் அடைவதற்காக, மத்திய அரசின் வருமான வரித்துறை தவறாக, விதிகளை மீறி பாஜகவால் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், விதி-123, பிரிவு-7ன் கீழ் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் பயனடையும் வகையில், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறி, மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியின் தேர்தல் ஆதாயத்துக்காக திமுக வேட்பாளர்கள் மீதும் - திமுக தலைமை மீதும், பொய்யாக களங்கம் சுமத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும், தண்டனைக்குரியதும் ஆகும்.

மேலும் தேர்தல் ஆணையம், அரசின் இந்த விதிமீறலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்" தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவிக்க உள்ளேன் என கூறினார்.

Tags:    

Similar News