சீரழியும் சிறுவர்களுக்கு சீர்திருத்த திட்டங்கள் தேவை:பாமக நிறுவனர் ராமதாஸ்

சிறுவர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுத்து சரியான பாதையை உறுதி செய்ய சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம்

Update: 2021-09-28 13:02 GMT

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

சிறுவர்கள் தவறான பாதையில் பயணிப்பதைத் தடுத்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய சீர்திருத்த திட்டங்கள், போதை தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் நிலை குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது தான் அந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும்.

இது அரசும், மக்களும் எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல. தமிழ்நாட்டில் சிறுவர்கள் ஈடுபட்ட கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த நான்காண்டுகளில் இரு மடங்குக்கும் கூடுதலாகியிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2016-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 1603 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 48 கொலைகளில் சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக் கூறி கைது செய்யப்பட்டனர். அடுத்த 4 ஆண்டுகளில் கொலைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை. ஆனால் சிறுவர்கள் கொலைக் குற்றங்களில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன.

2020-ஆம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 3.61% மட்டுமே அதிகரித்து 1661 ஆகியுள்ள நிலையில், சிறுவர்கள் கொலைக்குற்றங்களில் ஈடுபடும் நிகழ்வுகள் 116.66% அதிகரித்து 104 ஆக உயர்ந்துள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தான் கொலைக்குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை மிகவும் கவலையளிக்கக்கூடியவை ஆகும்.

கொலைக்குற்றங்கள் மட்டுமின்றி பிற குற்றங்களிலும் சிறுவர்கள் ஈடுபடுவது பெருகி வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2020-ஆம் ஆண்டில் தேசிய அளவில் சிறுவர்கள் அதிக அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்திருப்பதாக குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம்; அவர்களைத் தான் இந்தியாவை வல்லரசாக்கக் கூடியவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அனைத்திலும் சிறந்தவர்களாக வளர வேண்டிய அவர்கள், கொலை, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் சிக்கி சீரழிவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களை நல்வழிப்படுத்துவதே நமது முதன்மைக் கடமையாகும் என்றார் ராமதாஸ்.

Tags:    

Similar News