கோவிஷீல்ட் தடுப்பூசி விலை குறைப்பு - சீரம் நிறுவனம் அறிவிப்பு
கோவிஷீல்டு தடுப்பூசி விலையை குறைத்துள்ள சீரம் நிறுவனம், மாநில அரசுகளுக்கு ரூ.300க்கு விற்கப்படும் என அறிவித்துள்ளது.;
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சமீபத்தில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவிஷீல்டு, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.400 என்ற விலையில் விற்கப்படும் என்றது.
ஆனால், இதற்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்தன. கொடிய தொற்று பரவி வரும் சூழலில் தடுப்பூசி விலையை உயர்த்துவதா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், தடுப்பூசியின் விலையை ரூ.100 குறைத்து, சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி இனி மாநில அரசுகளுக்கு ரூ.300-க்கு விற்பனை செய்யப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், தனியார் மருத்துவமனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் எந்த வித மாற்றமும் இல்லை எனவும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.