வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்

சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-29 06:08 GMT

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வட கிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசுகிறார். 

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அனைத்து சேவை துறைகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் சென்னையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் மற்றும் நீர்வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பருவமழை காலத்துக்கு முன்பாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டுவரும் 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் பராமரிக்கப்பட்டுவரும் 6 சுரங்கப்பாதைகளை மழைநீர் தேங்கினால் உடனடியாக அகற்ற அதிக குதிரைதிறன் கொண்ட மோட்டார் பம்புகள் ஜெனரேட்டர் வசதியுடன் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், சுரங்கப்பாதையை சுற்றியுள்ள மழைநீர் வெளியேரும் வடிகால்களை தூர்வாரி சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

பொதுப்பணித்துறையின் சார்பில் மழைநீர் கடலில் கலக்கும் எண்ணூர் கழிமுக பகுதி, நேப்பியர் பாலம் பகுதியில் உள்ள முகத்துவாரம், அடையாறு முகத்துவாரம் மற்றும் முட்டுக்காடு முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் முகத்துவாரங்களை தேவையான அளவிற்கு அகலப்படுத்தவும், பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தற்காலிக தங்கும் முகாம்களை கண்டறிந்து அங்கு தேவையான வசதிகள் செய்துதர அறிவுறுத்தப்பட்டது.

மழைநீர் வடிகால்வாய் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் உள்ள மின்சார கேபிள்களை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சார்பில் தொலைதொடர்பு கோபுரங்கள் இயங்க தேவையான ஜெனரேட்டர்கள் மற்றும் எரிபொருள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்பு இருப்பின் அவற்றை வெளியேற்ற தேவையான நீர் இறைக்கும் பம்புகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு பருவமழைக்கு முன்னதாக முடிக்கவும், பருவமழையின் காரணமாக அதிகப்படியான மழைநீர் அல்லது வெள்ளம் ஏற்படின் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், போக்குவரத்து வசதிகளையும் வழங்குமாறு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News