விரைவில் 'வீடு தேடி பள்ளிகள்' திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்

மாணவர்களின் வீட்டுக்கே சென்று பாடம் நடத்தும் 'வீடு தேடி பள்ளிகள்' என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.

Update: 2021-09-30 10:08 GMT

பைல் படம்.

வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. கற்றல் இடைவெளியைப் போக்க எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு, பாடம் ஆசிரியர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த திட்டத்தை முதற்கட்டமாக சென்னையில் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும், தங்களது பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களின் பகுதிக்கு சென்று, அங்குள்ள மாணாக்கர்களை ஒருங்கிணைத்து, தினசரி 2 மணி நேரம் பாடங்கள் நடத்தவும், கற்றல் குறைபாட்டை போக்க பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட உள்ளனர். அவர்கள் பணி செய்வதை தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன், வீதி வகுப்பறை என்ற பெயரில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நவம்பர் 1ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக அக்டோபர் மாதமே, வீடு தேடிச் சென்று பாடம் நடத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் திறந்த பிறகும் மாலை நேரத்தில் மாணவர்களின் வசிப்பிடம் சென்று பாடம் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News