'கல்பனா சாவ்லா' விருதுக்கு வீரமங்கைகள் விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு!
வீரதீர செயல்புரியும் பெண்களுக்கான வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான 'கல்பனா சாவ்லா' விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், ஒரு பதக்கமும் அடங்கும். தமிழகத்தைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்கள்.
2021ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அரசுச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச்செயலகம், சென்னை – 600009 அவர்களுக்கு, 30/06/2021 க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருதுப் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.