கொரோனா நிதி வழங்கிய சிறுவனுக்கு சைக்கிள் பரிசளித்த உதயநிதி எம்எல்ஏ!
கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுவனுக்கு சைக்கிள் பரிசளித்து அசத்தினார் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ.;
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவிடுவதற்காக இயன்ற உதவியை முதலமைச்சரின் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். அதன்படி ஏராளமானோர் நிதி வழங்கி வருகின்றனர். சிறுவர்கள், சிறுமியர்கள் தங்கள் சேமிப்பு பணத்தை வழங்கி பாராட்டுக்களை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் சேப்பாக்கம் தொகுதி, நாயர் வரதப்பிள்ளை தெரு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நிவாரண பொருட்கள் வழங்கியபோது கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரணநிதிக்கு தன் உண்டியல் சேமிப்பை சிறுவன் அஸ்வத்ராம் வழங்கினார். அப்போது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னட்டு அந்த சிறுவனுக்கு உதயநிதிஸ்டாலின் எம்எல்ஏ சைக்கிளை பரிசாக வழங்கினார்.