மார்ச்சுக்குள் 1 லட்சம் விவசாய மின்இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள், வரும் மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும் என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-14 09:30 GMT

சென்னை அ ண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில்,  அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில்,  ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம், இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உட்பட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: வரும் மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகளை வழங்கப்படும். இதற்கு, மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு கடிதம் அனுப்பப்படும். 4லட்சத்து 52ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

கணக்கெடுப்பு எடுத்து ஒரு லட்சம் இணைப்புகளில் எந்தெந்த பிரிவுகளில் பிரித்தெடுக்கலாம் என்ற பட்டியல் தயாரிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. தக்கல் முறையில் பணம் செலுத்தியுள்ள விவசாயிகளுக்கும், மின் இணைப்பு கொடுக்கப்படும். ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுத்து வரலாறு படைக்கப்படும். ஒரு லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கும் திட்டம் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு, முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்.

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, புதிய மின் உற்பத்தி திட்டங்கள் அதிகரித்துள்ளன. 214 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. உற்பத்திக்கும், விநியோகத்திற்கும் இடையூறு இல்லாமல் பணிகள் நடைபெறும். அடுத்த 10ஆண்டுக்கு நம்முடைய மின் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று முதல்வர் கூறியதையடுத்து, 4000மெகாவாட் சூரிய உற்பத்தி திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும்.

நிலக்கரி மாயம் தொடர்பான விசாரணைக்குழு, இறுதி அறிக்கையின் ஆய்வில் உள்ளது. இறுதி அறிக்கையின் ஆய்வை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை, முதலமைச்சரின் ஆலோசனைப்படி எடுக்கப்படும். அடுத்த ஆண்டுக்குள் சென்னை முழுவதும் புதைவட மின்தடம் அமைக்கப்படும் . இவ்வாறு, செந்தில் பாலாஜி கூறினார்.

Tags:    

Similar News