வெள்ளத்தால் பாதித்த மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கிய எம்எல்ஏ உதயநிதி
சேப்பாக்கம் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.;
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தன் தொகுதியில் வடகிழக்குப் பருவமழையால் நீர் சூழ்ந்த பகுதிகளை இன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன் தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.
சேப்பாக்கம் 144வது வட்டம் லாக் நகர் கிளிமரம் பகுதியில் மழைநீரால் சூழப்பட்டு வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து மதிய உணவு-பிரெட்-குடிநீர் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
ராயப்பேட்டை 119வது வட்டம் அவ்வை சண்முகம் சாலையில் மழைநீர் தேங்கிய பகுதிகளையும் பார்வையிட்டு மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் மழை நீர் வடியும்வரை பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை எடுத்துக்கூறி பாதிக்கப்பட்ட மக்கள் அந்த இடங்களுக்குச் சென்று மழைநீர் வடியும்வரை பாதுகாப்பாக தங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நிவாரண உதவிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மழைநீரை வடியவைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.