மெரினா கடற்கரையில் தடையை மீறி குவிந்த மக்கள்: போலீசார் எச்சரிக்கை
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று தடையை மீறி கொரோனா பயமின்றி விடுமுறையை கழிக்க வந்த மக்கள் கூட்டத்தை, போலீசார் எச்சரித்து வெளியேற்றினார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ள மட்டும் அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று காலை முதலே சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர்.
மாலையில் தடையை மீறி கடற்கரையின் மணல் பரப்பில் வழக்கத்தை விட மக்கள் குவியத் தொடங்கினர். மேலும் கடல் அலையில் உற்சாகமாக நனைந்தும் குழித்தும் விளையாடத் தொடங்கினர்.
இதனால் மீண்டும் கொரோனா இயல்பு நிலைக்கு திரும்பி விடுமோ என்று என்னும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதியது.
இதனையடுத்து போலீசார் மணற்பரப்பில் குவிந்திருந்த பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் கடற்கரையில் ஓரளவுக்கு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.