மே 18: விசிக சார்பில் சென்னையில் நினைவேந்தல்: திருமாவளவன் பங்கேற்பு!
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே-18 *சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவேந்தல்* நிகழ்வு சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்ட ஈழ நினைவு படத்திற்கு மலர் தூவி,மெழுகுவர்த்தி ஏற்றி ஈழப்போரில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவேந்தல் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
அங்கு அமைக்கப்பட்ட ஈழ நினைவு படத்திற்கு மலர் தூவி,மெழுகுவர்த்தி ஏற்றி ஈழப்போரில் மரணமடைந்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவேந்தல் நிகழ்வில், கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலையச் செயலாளர்கள் இளஞ்சேகுவேரா, பாலசிங்கம் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தமிழ் சமுகம் அவர்களுக்குள் இருக்கும் விமர்சனங்களை கைவிட வேண்டும். ஈழத்தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தி அனைவரும் கைகோர்க்க வேண்டும். இந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும், அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளும் ஒருங்கிணைக்க முயற்சி எடுக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அதிகாரிகளை மட்டும் ஆலோசனை நடத்துவது மத்திய பாஜக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி கிளை ஆட்சி நடத்துவது போல் உள்ளது
ஒரே கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் செயல்பட வேண்டும் என்று பாஜக முயற்சி செய்கிறது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதனால் தமிழக அரசு இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என்றார்.