மெரீனா கடலில் மூழ்கி ஐடிஐ மாணவர் சாவு - காவல்துறை விசாரணை
சென்னை மெரீனாவில் கடலில் மூழ்கி ஐடிஐ மாணவர் இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு கோவிந்த்சிங் தெருவைச் சேர்ந்தவர் ஏ.சரவணன் (22). இவர் சென்னை மின்டில் உள்ள ஒரு ஐடிஐயில் இரண்டாமாண்டு படித்து வந்தார். சரவணன், திங்கள்கிழமை தன்னுடன் படிக்கும் மாணவர்களான பூபாலன், ஜீவா, தமிழரசன், கிஷோர் உள்பட 6 பேருடன் மெரீனா கடற்கரைக்கு வந்தார். கண்ணகி சிலை பின்புறம் கடலில் ஜீவா, பூபாலன் ஆகியோருடன் குளித்தார். 3 பேரும் குளித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த பெரிய அலையில் மூவரும் சிக்கிக் கொண்டனர். இதைப் பார்த்த அங்கிருந்த தீயணைப்பு படையினரும், போலீாஸரும் ஜீவா மற்றும் பாலனை உடனடியாகக் காப்பாற்றினர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சரவணனை மீட்க முயன்றனர். ஆனால், சரவணன் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனார்.
இதையடுத்து, போலீஸாரும், தீயணைப்புப்படை வீரர்களும் சரவணை தேடத் தொடங்கினர். ஆனால் சரவணன் கிடைக்கவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அண்ணா சதுக்கம் பகுதியில் சரவணன் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்த போலீஸார் சரவணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.