வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக அரசு சார்பில் புதிய இணைய தளம் தொடக்கம்
வரும் ஜனவரி 12-ஆம் தேதி புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள் விழா தமிழால் இணைவோம் என்ற பெயரில் சென்னையில் கொண்டாடப்பட உள்ளது;
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசின் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரகம் என்ற இணையதளம் தொடக்கம்.
புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசின் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர் ஆணையரகம் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது : புலம் பெயர்ந்த தமிழர்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக அளித்துவரும் பங்களிப்பினை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 12-ஆம் தேதி புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், வரும் ஜனவரி 12-ஆம் தேதி புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள் விழா, தமிழால் இணைவோம் என்ற பெயரில் சென்னையில் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரங்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தின் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக முன்னெடுக்கப்படும், நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதுடன் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
தற்போது ஒமிக்ரான் தொற்று மற்ற நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளையும் தமிழ்நாடு அரசு பூர்த்தி செய்யும். வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு, தமிழ் மொழியை கற்பிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளிநாடுகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஜனவரி. 12-ஆம் தேதி புலம் பெயர்ந்த உலகத் தமிழர் நாள் சென்னையில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழரிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை, இலக்கியம், வரலாறு போன்ற தகவல்கள் வெளியிடுவதுடன் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும்.