மலையாள படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஷகிலா. தற்போது பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வந்தார். ஆனால் கடந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஷகிலா தற்போது அரசியலில் இணைந்துள்ளார்.
அதன்படி அவருக்கு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷகிலா பேட்டியில் கூறியதாவது, நாடு முழுவதும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இப்படி பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை கொடுப்பவர்களுக்கு கட்டாயம் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். நடிகை என்பதை தாண்டி ஒரு அதிகாரத்தை பெற விரும்புகிறேன். ஏனென்றால் நல்லது செய்ய வேண்டும் என்றாலும் ஒரு பவர் வேண்டும். மேலும் காங்கிரஸிலிருந்து நடிகை குஷ்பு விலகியதால் நான் தற்போது அந்த இடத்தை நிரப்புவதற்காக வந்துள்ளேன் என்று சிலர் சொல்லி வருகின்றனர்.
ஆனால் அது உண்மை இல்லை. குஷ்பு உடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் சீனியர். கட்சி அனுமதி அளித்த பிறகு நான் பிரசாரம் செய்வேன். அரசியலில் நான் தற்போது கவனம் செலுத்தி வந்தாலும் எனது சினிமா பயணம் தொடரும் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்கள் சிலர் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்? தேர்தலில் மற்ற கட்சிகளை விமர்சித்து பேசுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஷகிலா, ஏன் இப்பவே இத்தனை கேள்வி கேக்குறீங்க. இப்பதான் அரசியலுக்கு வந்து இருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு இருக்கேன். இனி போக போக என் ஆட்டத்தை பார்ப்பீங்க என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.