கால நேரக்கட்டுப்பாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு தேவை: வணிகர் சங்கம்
கால நேரக்கட்டுப்பாடுகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளி்க்க வேண்டுமென வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்.;
அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறி, மற்றும் வணிக நிறுவனங்கள், உணவகங்களுக்கு நேரக்கட்டுப்பாடுகளை கொண்டுவந்தால் வாடிக்கையாளர்கள் கூட்டத்தை பெருக்கவே வழிவகுக்கும். எனவே தமிழக முதல்வர், இக்கருத்தை கவனத்தில் கொண்டு, நேரக்கட்டுப்பாடுகளை அறிவிப்பதற்கு முன் வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பொது மக்களும் வணிகர்களும் பாதித்திடாத வகையில் பாதுகாப்பான நடைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கையாள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகின்றது.
அதே நேரத்தில் அனைத்து வணிகர்களும் நோய் தொற்றால் தாங்களும் பாதிக்கப்படாமல், வாடிக்கையாளர்களும் பாதித்துவிடாமல் இருப்பதற்கான தமிழக அரசின் வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் அவசியம் கடைபிடித்து, மீண்டும் ஒரு ஊரடங்கு அறிவிப்பதை தவிர்த்து, வணிகத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமெனவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வணிகர்களும், வணிக நிறுவன ஊழியர்களும், மேலும் காலதாமதம் செய்யாமல், உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கடைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை முன்வைக்குமாறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவுறுத்துவதாக பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி இருக்கின்ற காரணத்தினாலும், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் நலன் கருதியும், கோயில் நடையடைப்பு என்பதை தவிர்த்து, நேரக்கட்டுப்பாடுகளுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஆலய தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதித்திட வேண்டும். முறையான கட்டுப்பாடுகளை வணிகர்கள் கடைபிடிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை பேரமைப்பு உறுதி செய்கின்றது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.