கொரோனோ குறைந்த பிறகே +2 தேர்வு குறித்து முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்

கொரோனா தொற்று குறைந்த பிறகே பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Update: 2021-05-24 04:17 GMT

அமைச்சர் அன்பில் மகேஷ்

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது குறித்து அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளருடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ போன்று நுழைவு தேர்வுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதல்வரின் முதன்மை செயலாளர் உதய சந்திரன், உயர்கல்வி துறை செயலாளர் அபூர்வா, பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், சி.பி.எஸ்.இ தேர்வு குறித்துதான் அதிகம் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

 மத்திய அரசின் கீழ் உள்ள பொறியியல், விவசாய கல்லூரிகளுக்கு மட்டுமே அதற்கான நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றது, ஆனால் நீட் மட்டும் மாநிலத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கும் கேட்கப்படுகிறது. மருத்துவ தேர்வுக்கு தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தாமல் மாநில அளவிலான தேர்வு நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்துள்ளோம்.அதுமட்டுமின்றி புதிய கல்வி கொள்கையை தமிழகம் முழுவதுமாக புறக்கணிப்பதாகவும், அதனை ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளோம் என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 12ம் வகுப்பு தேர்வு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கொரொனோ தொற்று முடிந்த பிறகே தமிழகம் 12 பொதுதேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்.

மேலும் சி.பி.எஸ்.இ தேர்வு தொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொருவிதமான கருத்தை தெரிவித்துள்ளனர். இது மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. எனவே  ஆல் பாஸ் போட்டுவிட்டு போய்விட முடியாது. ஆகவே பிளஸ் 2 தேர்வு நடத்தியே ஆகவேண்டும் என்பதுதான் அனைத்து மாநிலங்களின் கருத்து கூறினார்.

Tags:    

Similar News