அனைத்து வணிக நடவடிக்கைகளும் இயங்க நடவடிக்கை : முதலமைச்சரிடம் விக்கிரமராஜா கோரிக்கை
தமிழகத்தில் அனைத்து வணிக நடவடிக்கைகளும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து விக்கிரமராஜா மனு அளித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, அமைப்பு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதல்வரின் கோரிக்கையை ஏற்று கொரானா பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் வரைவோலை மற்றும் காசோலையாக வழங்கி, கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்கள்.
அந்த மனுவில், ஊரடங்கினால் முடக்கப்பட்டுள்ள அனைத்து வணிகம் மற்றும் வணிக நிறுவனங்கள் குறிப்பாக ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், காலணி கடைகள், பேன்சி ஸ்டோர்கள், பழைய கார் விற்பனை நிலையங்கள், தையல் நிலையங்கள், பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கடைகள் என பாகுபாடின்றி அனைத்து வணிகங்களும் இயங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்கவேண்டும்.
இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திடவும் தமிழக அரசு முனைந்து நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இக்கோரிக்கையின் மூலம் வலியுறுத்துகிறது.
பேரிடர் கால ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களின் நிலைகுலைந்த வாழ்வாதாரத்தை நிலைபடுத்தவும், வாழ்வாதார உயர்வுக்கும் முறையான உதவிகளை தமிழக அரசு அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.