நீட் தேர்வு விவகாரம்: பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் காரணம் என்று கூறி, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்வு விவாகரத்தில் மாணவர் உயிரிழப்புக்கு திமுக காரணம் என்று கூறி, தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின்னர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாணியம்பாடியை சார்ந்த இஸ்லாமிய சகோதரர் கஞ்சா விற்பனை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததால் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை நிகழ்ச்சி தொடங்கியவுடன் அவசர முக்கியத்துவம் இரண்டு விஷயங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
வாணியம்பாடியில் கொலை செய்தவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என அரசின் கவனதிற்கு கொண்டு வந்தேன்.திமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் முதல் வேலை நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்தார், ஆனால் ரத்து செய்யவில்லை.தெளிவான முடிவையும் தெரிவிக்கவில்லை
ஜூன் மாதம் ஆளுநர் உரையின் போது, நான் கேள்வி எழுப்பியபோதும் முதல்வர் மழுப்பலான பதில் அளித்தார். இந்த அரசிடம் தெளிவான அறிவிப்பு இல்லாமல், குழப்பமான நிலையில், நேற்று தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெறுகிறது, நாம் தான் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் இதற்கு முழு பொறுப்பு திமுக அரசு தான்.
அதிமுக அரசு, நீட் தேர்வை ரத்து மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பியது. நாங்கள் ரத்து செய்தபோது, அது அயோக்கியத்தனம் என ராசா கூறினார், இப்போது அவர்கள் தீர்மானம் கொண்டு வருவதை என்னவென்று சொல்வது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பும், நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு சட்ட போரட்டத்தை தொடர்ந்து நடத்தியது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.