நடிகர் மன்சூர் அலிகானுக்கு 2 லட்சம் அபராதத்துடன் முன்ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 2லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமின் வழங்கியது.;
காலஞ்சென்ற நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தியபோது, சென்னையில் உள்ள மருத்துவமனை முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி போடுவது குறித்து விமர்சித்திருந்தார். இதையடுத்து கொரோனா தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல் பரப்பியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், நடிகர் மன்சூர் அலிகான் மீது, சென்னை வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இன்று கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து, அந்த தொகையை தடுப்பூசி வாங்க சுகாதாரத்துறைக்கு தரவும் ஆணையிட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பக்கூடாது என நிபந்தனை விதித்து, கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, முன்ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.