மெட்ரோ ரயில் பணி: சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதையொட்டி இன்று முதல் புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது

Update: 2021-10-19 12:30 GMT

பைல் படம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதையொட்டி இன்று ஒரு வழிப்பாதையாக புரசைவாக்கம் நெடுஞ்சாலை மாற்றம் செய்யப்பட்டது.

புரசைவாக்கத்தில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கியதையொட்டி இன்று முதல்  புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல். அலுவலக சிக்னலில் இருந்து அபிராமி தியேட்டர் வழியாக கெல்லீஸ் சாலை வரை ஒருவழிப்பாதையாக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலையின் ஒரு பகுதி முழுவதும் மெட்ரோ நிறுவனம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் சென்று வருகின்றன. கெல்லீஸ் சாலை வழியாக புரசைவாக்கத்தை நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 23 கி.மீ. தூரம் சுரங்க வழியாகவும் 22 கி.மீ. வழித்தடம் மேம்பாலம் வழியாகவும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை மேலும் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டது. 2-ஆவது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாதவரம்- சிறுசேரி, மாதவரம்- சோழிங்கநல்லூர், கலங்கரைவிளக்கம்- பூந்தமல்லி என 119 கி.மீ. தூரத்துக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முடிக்கப்பட்டால் வட சென்னையில் இருப்பவர்கள் தென் சென்னைக்கும் தென் சென்னையில் இருப்பவர்கள் வட சென்னைக்கும் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல முடியும்.

Tags:    

Similar News