சென்னைத் துறைமுகத்தின் கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்ட இலக்கு
வரும் 2024-ம் ஆண்டுக்குள் சென்னை துறைமுகத்தின் ஒட்டுமொத்த கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது;
வரும் 2024-ம் ஆண்டுக்குள் சென்னைத் துறைமுகத்தின் ஒட்டுமொத்த கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சென்னைத் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் துறைமுக தின நிகழ்ச்சி சென்னைத் துறைமுகத்தில் நடைபெற்றது. துறைமுகத் துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் முன்னிலையில் போக்குவரத்து மேலாளர் எஸ்.கிருபானந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் தலைமை விருந்தினராகக் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் கலந்து கொண்டு அதிக அளவிலான சரக்குகளைக் கையாண்டு துறைமுகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த 22 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த துறைமுக ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதியை சுனில் பாலிவால் வழங்கினார்.
பின்னர் சுனில் பாலிவால் பேசியதாவது: கொரோனா பெருந்தொற்று போன்ற கடினமான காலத்திலும் துறைமுக ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியது பாராட்டுக்குரியது. அண்மையில் தாக்கிய மாண்டஸ் புயல் கரையைக் கடந்தபோது சென்னைத் துறைமுகத்திற்கு பலத்த அச்சுறுத்தல்கள் இருந்தன. இருப்பினும் துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் திட்டமிட்டு திறம்பட பணியாற்றியதால் புயலால் ஏற்படவிருந்த பாதிப்பு பெருமளவு தவிர்க்கப்பட்டது.
சென்னைத் துறைமுகத்தை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல ஊழியர்கள், துறைமுக உபயோகிப் பாளர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும். வரும் 2023-24-ம் நிதியாண்டிற்குள் சென்னைத் துறைமுகத்தின் ஒட்டுமொத்த கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னைத் துறைமுகத்தின் துணை நிறுவனமாக உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்துடன் இணைந்து இந்த இலக்கை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் உறுதியேற்க வேண்டும் என்றார் சுனில் பாலிவால்.இதில் துறைமுகத்தின் துறை தலைவர்கள், ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னைத் துறைமுகம் ..ஒரு பார்வை..
சென்னை மாநகருக்கென்று பல சிறப்புகள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று சென்னை மாநகரின் மிகப் பழமை வாய்ந்த துறைமுகம். இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை வகிக்கும் இத்துறைமுகம், பல விதங்களில் சிறப்பு வாய்ந்தது. தென் இந்தியாவின் நுழைவாயில் என்ற பெருமை சென்னைக்கு கிடைக்க இந்த துறைமுகம் தான் காரணம். மேலும், தென் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக இது விளங்குகிறது என்பதில் மாற்று கருத்தில்லை.
இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்களில் 3 வது பழமையான ஒன்றாக திகழும் இது, 125 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. எனினும், 1639 ம் ஆண்டிலிருந்தே இங்கு கடல் வழி போக்குவரத்து துவங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருடம் முழுக்க, நான்கு காலநிலைகளிலும் இயங்கும் இந்த செயற்கை துறைமுகம், முதலில், பயணிகள் போக்குவரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்கியது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல ஆசிய நாடுகளோடு பயணிகள் போக்குவரத்தே இங்கு மும்முரமாக நடந்து வந்தது. பிறகு, சிறிய அளவில் சரக்கு ஏற்றுமதி தொடங்கி, நாளடைவில், மிகப்பெரிய சரக்கு போக்குவரத்தைக் கையாளும் திறன் கொண்டதாக இத்துறைமுகம் தன்னை மாற்றிக்கொண்டது.
வெளிநாடுகளில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதில் முன்னணியில் உள்ள சென்னை துறைமுகம், பணப்பயிர்களையும், கிரானைட் கற்கள் மற்றும் இரும்புத் தாது போன்றவற்றை ஏற்றுமதி செய்வதிலும் முன்னிலை வகிக்கிறது.உலக அளவில் சரக்கு கையாள்வதில் 86 வது இடத்தில் இருக்கும் இத்துறைமுகம், கணிசமான அளவு தர வரிசையில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது.