வழிபாட்டு தலங்களை திறக்க கோரி தமிழகத்தில் 12 இடங்களில் பா.ஜனதா போராட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க கோரி பாஜக 7-ந் தேதி போராட்டத்தில் ஈடுபடுகிறது.;

Update: 2021-10-02 17:31 GMT

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க கோரி பாஜக 7-ந் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் சென்னையில் அண்ணாமலையும் மதுரையில் நடிகை கவுதமியும் அந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நவராத்திரி விழா இந்துக்களின் மிக முக்கியமான விரத நாட்களும், பூஜை நாட்களும் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நவராத்திரி விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். கொரோனா காலத்தில் பூட்டப்பட்ட மதுக்கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஆலய வழிபாட்டிற்கு மக்களுக்கு உரிமை இல்லை என்பது வேடிக்கையாக உள்ளது.

இந்துக்களின் ஆலயங்களை குறிவைத்து எல்லாவிதத்திலும் அழிக்க நினைப்பதை கண்டித்து வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) 12 முக்கிய கோவில்கள் முன்பு மாவட்ட தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தை நடத்த எச்.ராஜா தலைமையில் லோகநாதன், வினோத் செல்வம், மீனாட்சி, பொன் பாலகணபதி, நாகராஜ் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையிலும், திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு கரு.நாகராஜன், நடிகை கவுதமி ஆகியோர் தலைமையிலும், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் முன்பு சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும், ஸ்ரீரங்கம் மலைக்கோட்டையில் ராமஸ்ரீனிவாசன் தலைமையிலும், சென்னை காளிகாம்பாள் கோவில் முன்பு மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும் போராட்டம் நடைபெறும்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு கருப்பு முருகானந்தம் தலைமையிலும், கோவை கோனியம்மன் கோவில் முன்பு வானதி சீனிவாசன் தலைமையிலும், திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன், சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையிலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் எச்.ராஜா தலைமையிலும், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் தடா.பெரியசாமி, ஏ.ஜி.சம்பத் தலைமையிலும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வி.பி. துரைசாமி, கே.பி.ராமலிங்கம் தலைமையிலும் போராட்டம் நடைபெறும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News