உள்ளாட்சி பதவிகள் ஏலம்: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-17 10:45 GMT

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி அக்.6, அக்.9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நடந்து வருகிறது. மேலும், வரும் 22ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதியாகும். வரும் 23ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் .

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் மூலம் மட்டுமே உள்ளாட்சி பதவிகளை நிரப்ப வேண்டும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது ஜனநாயகத்துக்கு ஊறுவிளைவிக்கும். உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News