செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்கத்தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
செப்டம்பர் 1 ம் தேதி பள்ளிகளை திறக்க தயாராக உள்ளோம் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர் .
கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளை திறந்த பிறகு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே பள்ளிகள் திறப்பு தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டது. அவற்றில் கூடுதல் அம்சங்களை சேர்ப்பது தொடர்பாக இன்று ஆலோசித்தோம். புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு நாளில் வெளியாகும் .
முதலமைச்சர் கூறியுள்ளபடி 50 சதவீத மாணவர்களை கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். 40 மாணவர்கள் இருந்தால் ஒருநாளில் 20 மாணவர்கள் வரவழைக்கப்படுவர். ஒரே நாளில் இரண்டு வேளைகளாக மாணவர்கள் வரவழைக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பள்ளிக்கு வராத இடைப்பட்ட ஒருநாள் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சி வழங்கப்படும்.
எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்கள் உள்ளன. தனியார் பள்ளியில் இருந்து 2 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். பெற்றோரின் மூலம் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனரா என்பது குறித்து குழந்தை தொழிலாளர் ஆணையத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முதல்வரின் அறிவிப்பின்படி செப்டம்பர் 1 ல் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறையினர் தயாராக உள்ளோம். 14 மாநிலங்களில் பல்வேறு வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.
பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுந்தப்பட்டு விட்டது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் தகவல் பெறப்பட்டு் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் .
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள 14 விலையில்லா பொருட்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். முதலமைச்சர், நிதி அமைச்சருடன் ஆராய்ந்து மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் எவை எவை என தீர்மானிக்கப்படும்.
7ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல். நீட் விலக்கு என்பதே திமுகவின் கருத்து, அதற்கான சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். நவம்பர் 9 முதல் நீட் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் மாணவர்கள் குறைவாகவே நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். விழிப்புணர்வு குறைந்துள்ளதே இதற்கு காரணம். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை தரம் உயர்த்துவது தொடர்பாக பட்ஜெட் தாக்கலான பிறகு அறிவிக்கப்படும் என்று கூறினார்.