1௦௦ நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள்: பெண்களுக்கும் வாய்ப்பு- அமைச்சர் சேகர்பாபு!
தமிழகத்தில் 1௦௦ நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக செயல்படுவார்கள். பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று காலை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும். தமிழில் அர்ச்சனை செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படும். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை வைக்கப்படும்.
மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர் , செல்போன் எண் அறிவிப்பு பலகையில் இடம் பெறும்.ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையே ஜீயர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவர்.
100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக இருப்பார்கள். பெண்களும் அர்ச்சகர்களாக விருப்பப்பட்டால், தமிழக அரசின் உதவி மூலம் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.