சென்னையில் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடரும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
கொரோனா தொற்று குறைந்தாலும் சென்னையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வல்லுநர் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் தினசரி செய்யப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்காமல் தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்படும். காய்கனி, இறைச்சி விற்பனை மேற்கொள்ளும் மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை செய்ய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் கணக்கெடுப்பு செய்து, அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என்பதையும் கேட்டறிந்து, அதனடிப்படையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.