கோயம்பேடு மார்க்கெட்: 10 ஆயிரம் தடுப்பூசி இலக்கு- அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.;
சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள மினி கிளினிக் கொரோனா தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு சந்தையில் 10,000 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கூறினார்.
கொரோனா தொற்றிலிருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். ஆகவே அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இதுவரை 9,655 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே போல் காசிமேடு மீன் மார்க்கெட்டில் 2500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரும்பாலான வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டுக்கு இன்று 4.25 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வர உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச்செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.