மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப்; தமிழக வீராங்கனைக்கு அமைச்சர் வாழ்த்து
மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செவி திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நான்காவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை போலந்து நாட்டில் நடக்க உள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க தேர்வாகியிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பெருமை தரும் செய்தியாகும்.
வாழ்வில் பல போராட்டங்களை தனது மன உறுதியாலும் கடுமையான உழைப்பாலும் தொடர்ந்து வென்று வரும் வீராங்கனை சமீஹா பர்வீன் இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சர்வதேச அரங்கில் தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டுவார் என்று அனைவரும் உறுதியாக நம்புகிறோம். லட்சியத்தை நோக்கி மனம் தளராமல் முன்னேறும் சமீஹா பர்வீன் தமிழக விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
அவரது வெற்றி சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு தமிழ் இளைஞருக்கும் நம்பிக்கை ஒளியூட்டும். முதல்வரின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னேறி வரும் தமிழக விளையாட்டுத்துறைக்கு சமீஹா பர்வீன் பெறப்போகும் வெற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அங்கீகாரமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வீர மங்கை சமீஹா பர்வீன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டும் என்று முதல்வர் மற்றும் தமிழக விளையாட்டு வீரர் வீராங்கனைகள், மக்கள் அனைவரின் சார்பாகவும் மனமார வாழ்த்துகிறேன்.
சிங்க மகள்'சமீஹா பர்வீன் உலக சாம்பியன்ஷிப் வென்று ' தங்க மகளாக ' திரும்பி வர வேண்டும் என்று தமிழகம் வாழ்த்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.