மழை நீர் சேகரிப்பு இல்லாவிட்டால் புதிய வீடுகளுக்கு அனுமதி கிடையாது

மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத வீடுகளுக்கு, இனி அனுமதி வழங்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்.

Update: 2021-09-26 03:40 GMT

புதிதாக கட்டப்படும் வீடு, வணிக கட்டடங்களில், மழை நீர் சேகரிப்பு அமைப்பு வசதி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே, அனுமதி வழங்க வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற அக்., 2ல் நடக்கவுள்ள கிராம சபை கூட்டத்தில், மழை நீர் சேகரிப்பு இல்லாவிட்டால் புதிய வீடுகளுக்கு அனுமதி கிடையாது என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட இருக்கிறது

வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், திருமண மண்டபங்கள், பொதுக்கட்டடங்கள் என, அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பில், அடைப்பு ஏதுமின்றி, முறையாக பராமரிக்க வேண்டும். பழுதடைந்த மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். கட்டமைப்பு இல்லாத இடங்களில் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில், மழை நீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். ஊரகப் பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், கை பம்புகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளை, மழை நீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வேண்டும் . கிராம ஊராட்சிகளில் இனி புதியதாக கட்டப்படும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத வீடுகளுக்கு கட்டிட அனுமதி வழங்கப்படாது என்று கண்டிப்புடன் மக்களுக்கு அக்., 2ல் நடக்கவுள்ள கிராம சபை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட இருக்கிறது. 

Tags:    

Similar News