அம்பத்தூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம்
அம்பத்தூரில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பங்கேற்றார்.
தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் அம்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு துணைத் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்ட கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தை, கட்சி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். கட்சி கட்டமைப்பு வலிமைப்படுத்துவது, பலப்படுத்துவது, வாக்கு வங்கியை இன்னும் அதிகப்படுத்த ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நடத்தி வருகிறோம். நிறைவாக இன்று சென்னை மாவட்டத்தில் கூட்டத்தை துவக்கி இருக்கிறோம். இன்னும் ஒரு வாரத்தில், மீதமுள்ள மாவட்டத்தில் கள ஆய்வு செய்து, அகில இந்திய தலைமையிடம் எடுத்துக்கூறி, பொறுப்புகளை மாற்றி அமைப்பதற்கான ஆலோசனை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதை வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொலை மிரட்டல் யார் விடுத்திருந்தாலும், சென்னை மாநகர் காவல் துறை அவர்களை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அந்த குடும்பத்திற்கு, பாதுகாப்பாக முதல்வர் இருப்பதாக எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். நானும் முதல்வரை சந்திக்கும் போது அது குறித்து பேச இருக்கிறேன். ஆர்ம்ஸ்ட்ராங் கொலை பொறுத்தவரை, புலன் விசாரணையில் தான் யார் கொலை செய்திருக்கிறார்கள் என தெரியும். நமது காவல்துறை ஸ்காட்லாந்துக்கு நிகரான காவல்துறை, எனவே கண்டிப்பாக உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள் என கூறினார்.