சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் 90% நிறைவு: ஆணையர்
சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.;
சென்னை தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் 106 கோடி ரூபாயில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்;
தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களை கண்காணிக்க 15 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாம்பலம் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கம், வளசரவாக்கம், வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல் மற்றும் நீர் நிலைகளில் மிதக்கும் தாவரங்களை அகற்றி, தூர்வாரும் பணிகளை பருவமழை காலத்திற்கு முன்னதாகவே விரைந்து முடிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு, பணிகளை தினமும் கண்காணித்து பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அனைத்துத் துறை அலுவலர்களும் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்