தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்? உள்துறை அமைச்சகம் 'அட்வைஸ்'
இரவில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க, தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.;
தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து இரவுநேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் பிறப்பித்து வருகின்றன.
இதையும் மீறி தினமும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் இன்னும் வைரஸின் சீரிய தன்மையை உணரவில்லை என்றே தெரிகிறது. பொது இடங்களில் வெளியே வரும் பலர், இன்னும் மாஸ்க் அணியாமல் வருகின்றனர். தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ளனர். கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுவதற்கு, இதுவும் முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க, தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பிறப்பித்து கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.