குடியிருந்த வீட்டில் பணத்தை திருடி வாகனம், தங்கசெயின் வாங்கிய குவித்த நபர் -வசமாக போலீசில் மாட்டினான்
வாடகைக்கு குடியிருந்த வீட்டில், பணத்தை திருடி, இருசக்கர வாகனம் மற்றும் தங்க செயின் வாங்கியவரை, சேலையூர் போலீசார் கைது செய்தனர்.;
வாடகைக்கு குடியிருந்த வீட்டில், பணத்தை திருடி, இருசக்கர வாகனம் மற்றும் தங்க செயின் வாங்கியவரை, சேலையூர் போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், அகரம் தென், மப்பேடு, ஜோசப் தெருவைச் சேர்ந்தவர், கார்த்திக்(29), இவரது, வீட்டில் குடியிருந்த, திருவாரூர் மாவட்டம், பரவக்கோட்டை, சாமிநாதன் தெருவைச் சேர்ந்த, மணிகண்டபிரபு (29) என்பவர், ஐந்து மாதங்களுக்கு முன் குடியேறினார். கடந்த, 30ம் தேதி, கார்த்திக்கின் வீட்டில் இருந்து, 4 லட்சம் ரூபாய் திருடு போனது. அதேநேரம், மணிகண்டபிரபுவும் 30ம் தேதிக்கு பின், தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, கார்த்திக் சேலையூர் காவல் நிலையத்தில், சம்பவம் குறித்து, புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்ததில் கார்த்திக் வீட்டிற்குள் நுழைந்து, மணிகண்டபிரபு பணத்தை திருடுவது, சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து, தலைமறைவாகி இருந்த, மணிகண்டபிரபுவை சேலையூர் போலீசார், தேடி வந்த நிலையில், திருவாரூரில் பதுங்கி இருந்த அவரை, கைது செய்து, போலீசார் சேலையூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம், விசாரணை நடத்தியதில், கார்த்திக் நகை வாங்குவதற்காக, வங்கியில் இருந்து, பணம் எடுத்து வந்து வைத்திருந்ததாக, தன்னிடம் கூறியதாகவும், அதை தொடர்ந்து, இருசக்கர வாகனம் மற்றும் நகை வாங்க, பணத்தை திருடியதாகவும், வாக்குமூலம் அளித்தார். மணிகண்டபிரபுவிடம் இருந்து, திருடிய பணத்தில் வாங்கிய, ஒரு சவரன் தங்க செயின், இரண்டு கிராம் மோதிரம், ‛பஜாஜ் அவெஞ்சர்' இருசக்கர வாகனம், 1.50 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை, பறிமுதல் செய்த, போலீசார் சிறையில் அடைத்தனர்.