பல்வேறு சாலைகளில் போக்குவரத்துக்கு தடை: தாம்பரம் காவல்துறை அறிவிப்பு
தாம்பரத்தில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதித்து தாம்பரம் காவல்துறை அறிவித்துள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக ஞாயிறு மாலைமுதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. மேலும், மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளது.
தாம்பரம் காவல்துறைக்கு உள்பட்ட ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி பிரதான சாலை, ஓஎம்ஆர் சாலை மற்றும் முக்கிய சாலைகளில் பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் விழுந்துள்ளது.
இதனை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று தாம்பரம் காவல் துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகள்:
1. சோழிங்கநல்லூர் சந்திப்பு முதல் மேடவாக்கம் குளோபல் மருத்துவமனை வரை
2. பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை மேம்பாலத்தில் மின்கம்பம் விழுந்துள்ளதால் மேம்பாலம் மூடப்பட்டுள்ளது.
3. காமாட்சி மருத்துவமனை முதல் ஈச்சங்காடு சந்திப்பு மற்றும் 200 அடி சாலை மூடப்பட்டுள்ளது.
4. 400 அடி வெளிவட்ட சாலை, வண்டலூர் முதல் பூந்தமல்லி சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை
5. சிட்லப்பாக்கம் முதல் மாம்பாக்கம் சாலை
6. வெள்ளநீர் செல்வதால் தாம்பரம் - முடிச்சூர் சாலையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது
7 ஓஎம்ஆர் சாலையில் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டு கேளம்பாக்கம் சந்திப்பில் இருந்து வண்டலூர் வழியாக திருப்பி விடப்படுகிறது