விஜய் கட்சி 6 மாசம்தானா..? திமுக ஏன் எதிர்க்கிறது?
விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் ஓடுவதில்லை. விஜய்யின் அரசியல் கட்சி 6 மாதம் தான். அதற்கு மேல் அந்த கட்சி தாங்காது என அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்துவதற்கு திமுக அரசு அனுமதி வழங்காமல் குடைச்சல் கொடுப்பதாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், அமைச்ச அன்பரசனின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாடம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசும்போது, “இன்று நடிகர்கள் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டார்கள். ஏற்கனவே அரசியலுக்கு வந்த பல நடிகர்களின் நிலைமை எல்லாம் என்னவென்று நாம் பார்த்துவிட்டோம். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து இன்று என்ன ஆனார்? அதேபோல இப்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார்.
6 மாதங்கள் மட்டுமே
யார் அரசியலுக்கு வந்தால் நமக்கென்ன? அதற்கெல்லாம் திமுகவினர் பயப்படக்கூடாது. எத்தனை காலம் ஆனாலும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுக மட்டுமே. விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடுவதில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 மாதங்கள்தான் தாக்குப் பிடிக்கும். அதற்கு மேல் அந்த கட்சி தாக்குப்பிடிக்க முடியாது.
சினிமாவுக்கு கூட்டம் வந்தால் அரசியலுக்கும் அது பொருந்துமா? சினிமாவுக்கு வருகிற கூட்டத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் கட்சி தொடங்கி உள்ளார். 6 மாதங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற சினிமா பெட்டியை உள்ளே வைத்து பூட்டிவிடலாம்” என்று பேசியுள்ளார்.
தா.மோ. அன்பரசன் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
விஜய்யின் அரசியல் பிரவேசம்
தெரிஞ்சோ தெரியாமலோ விஜய்-ன் அரசியல் பிரவேசம் பலருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கினார். கட்சி தொடங்கிய பின்னர் நடந்த பார்லி தேர்தலில் போட்டியிடுவதில்லை. எங்கள் நோக்கம் 2026ம் ஆண்டில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்தான் என்று கூறி இருந்தார். அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துளளது.
கட்சி அங்கீகாரம்
கட்சிக்கான அங்கீகாரம் கிடைத்த பின்னர் தற்போது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள், கட்சியினர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுளளது.
விக்கிரவாண்டி மாநாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்புத் தர வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. பின்னர் காவல் துறையினர், மாநாடு பற்றி 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்றை தாவெகவுக்கு வழங்கினர்.
மாநாட்டு அனுமதி
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 21 கேள்விகளும் உரிய பதில் அளித்து அதற்கான பதில் விளக்கங்களை கடந்த 6 ஆம் தேதி போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு போலீசார் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கி உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் கட்சி மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், மாநாடு நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதல் மாநாடு என்பதால் கட்சியினர் பெரும் எதிர்பார்ப்போடு மாநாட்டுத் தேதியை எதிர்நோக்கியுள்ளனர். கட்சித் தலைவர் விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாநாட்டில் சில பரபரப்பான காட்சிகள் அரங்கேறலாம் என்று எதிர்க்கபார்க்கப்படுகிறது. பல அனுபவம் வாய்ந்த பிற கட்சி அரசியல்வாதிகள் இந்த மாநாட்டின்போது தமிழக வெற்றிக்கழகத்தில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில மூத்த அரசியல்வாதிகள் அவர்களது கட்சியில் மரியாதை தேய்ந்து இருக்கும் இந்த சூழலில் விஜய் தலைமையிலான கட்சியில் இணைவதற்கு ஆர்வமாக உள்ளதாகவும் தெரிகிறது.
அரசியல் களம் இனிமேல் சூடுபிடிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சிலர் கூறினாலும், கூட்டம் சேர்வதால் மட்டுமே வாக்குகள் கிடைத்துவிடாது. அவைகள் வாக்குகளாக மாறவேண்டும். அது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தெரிந்துவிடும் என்கிறார்கள் சிலர்.
அதிமுக நிலை
இன்னும் சிலர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருந்தாலும் அவருக்கு என்று தனி ஆளுமை கிடையாது. இதை அவர்களின் கட்சித் தொண்டர்களே கூறுகிறார்கள். ஏதோ ஆளு இல்லை. அவரு தலைவர் ஆகிட்டாரு. அவரைவிட திறமையான செங்கோட்டையன் இருக்கார். அவர்தான் சீனியரும் கூட.
அதனால் அதிமுக அடுத்த தேர்தலில் படு மோசமான தோல்வியை சந்திக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்களை. அதனால் விஜய்க்கு வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. ஒருவேளை அடுத்த தேர்தலில் பெரிய அளவில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது பெறுவார்கள் என்கிறார்கள்.
ஆக இப்போதைக்கு விஜய்யோடு திமுகதான் மோதும் போலுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் திமுகவுக்கு எதிரான வலுவான அணியில் இணைந்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு குறையலாம் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில்தான் விஜய் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
ஆனால் நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம்.