வாகன திருட்டில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் வாகனங்கள் பறிமுதல்
தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை போலீசார் கைது செய்து விலை உயர்ந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் ராஜீவ்காந்தி சாலை துரைப்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்க்கு ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி, துரைப்பாக்கம் மற்றும் செம்மெஞ்சேரி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் குறியீடுகள் கொண்டு தேடுதல் வேட்டையினை தொடங்கினர்.செல்போன் குறியீட்டின் மூலமாக குற்றாவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார், சென்னை பெரம்பூரை சேர்ந்த முகமத் காலித் (27), அம்பத்தூரை சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருவரும் வாகன திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அதுமட்டுமின்றி திருடிய வாகனங்களை சென்னையின் பல பகுதிகளிலும், திருச்சி, ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இருசக்கர வாகனம் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களையும் திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, விசாரணையை துரித படுத்திய போலீசார், குற்றவாளிகள் இருவர் கொடுத்த தகவலின் படி, திருட்டு சம்வபத்தில் அவர்களுக்கு உதவியாக இருந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முகமது சபீர்(31), திருப்பத்தூரை சேர்ந்த சரத்(31), ஆம்பூரை சேர்ந்த சதீஷ் (33) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து விலை உயர்ந்த புல்லட் பைக் உள்பட 11 இருசக்கர வாகனங்களும், இரண்டு டாட்டா ஏசி சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.