கடத்தல் தங்கம் மற்றும் மின்சாதனப் பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது
இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் மின் சாதனப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் சிறப்பு பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த 6 பயணிகள் ஒரு குழுவாக இந்த விமானத்தில் வந்தனா்.சுங்கத்துறையினருக்கு அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த 6 பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனா்.அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.இதனால் சந்தேகம் வலுத்தது.இதையடுத்து அவா்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனா்.அவா்களில் 2 போ் தாங்கள் கால்களில் அணிந்திருந்த செருப்புகளில் தங்கப்பசை பாக்கெட்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.மற்ற 4 பயணிகளின் உள்ளாடைகளுக்குள் தங்கக்கட்டிகள்,சூட்கேஸ்களில் மறைத்து வைத்திருந்த மின்னணு சாதனப்பொருட்களையும் பறிமுதல் செய்தனா்.
6 பயணிகளிடமிருந்து 928 கிராம் தங்கம் மற்றும் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனா்.அவைகளின் மதிப்பு ரூ.45.5 லட்சம்.இதையடுத்து 6 கடத்தல் பயணிகளையும் சுங்கத்துறை சட்ட விதிகளின்படி கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.