சூறைக்காற்றுடன் பலத்த மழை; சென்னை ஏர்ப்போர்ட்டில் விமானங்கள் தவிப்பு
சென்னை புறநகா் பகுதியில் இன்று அதிகாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை புறநகா் பகுதியில் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து ஏா்ஏசியா விமானம் 61 பயணிகளுடன் நேற்று இரவு 10.45 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்தது. அப்போது சூறைக்காற்று மழை அதிகமாக இருந்ததால்,விமானம் தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் வானில் வட்டமடித்தது. இதையடுத்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினா். அதன்பின்பு அந்த விமானம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு பெங்களூரிலிருந்து சென்னைக்கு திரும்பி வந்தது.
அதைப்போல் சென்னையிலிருந்து டில்லி,பெங்களூா் செல்ல வேண்டிய 2 பயணிகள் விமானங்கள், ஹைதராபாத், பெங்களூா், ஹாங்காங் செல்ல வேண்டிய 3 சரக்கு விமானங்கள் சுமாா் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
இதனால், பயணிகள் கடும் தவிப்புக்கு ஆளாகினர். விமானங்கள் இயக்கத்திற்குப்பின் புறப்பட்டு சென்றனர்.