அந்நிய செலவாணி மோசடி வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

சென்னை விமானநிலையத்தில் அந்நிய செலவாணி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான குற்றவாளியை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2022-01-27 05:20 GMT

சென்னை விமான நிலையம்.

துபாயில் இருந்து ஃபிளை துபாய் என்ற சிறப்பு பயணிகள் விமானம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் 156 பயணிகள் வந்தனா்.

சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் அந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சோதனையிட்டனர். அப்போது அந்த விமானத்தில் வந்த சென்னை மண்ணடியை சேர்ந்த நிஜாமுதீன்(42) என்ற பயணியின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை கம்ப்யூட்டா் மூலம் அதிகாரிகள் பரிசோதித்தனர். அந்த சோதனையில் அவர் என்போா்ஸ்மெண்ட் டைரக்டரேட் எனப்படும் அமலாக்கத் துறையினரால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

இதையடுத்து நிஜாமுதீனை அதிகாரிகள் தனியாக நிறுத்தி வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் அவர் அளித்த பதில் அதிகாரிகளுக்குத் திருப்தியாக இல்லை. இதையடுத்து அவரை வெளியில் விடாமல் குடியுரிமை அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் அவரை ஒப்படைக்க உள்ளனர்.

Tags:    

Similar News