தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
அச்சிறுப்பாக்கம் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்;
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்துக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
நேற்று செங்கல்பட்டு மவட்டத்தில் ஒரே நாளில் 615 பேருக்கு பாதிப்பு இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் அச்சிறுப்பாக்கம் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தடுப்பூசி போட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அங்கு ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அனைவருக்கும் வட்டார மருத்துவ அதிகாரி ரேகா மேற்பார்வையில் தடுப்பூசி போடப்பட்டது. இம்முகாமில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன், காவல்நிலைய ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.