கீரப்பாக்கம் ஊராட்சியில் இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஆய்வு

கீரப்பாக்கம் ஊராட்சியில் இருளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க டி.ஆர்.ஓ வீடு வீடாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2022-02-17 11:22 GMT

இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆய்வு நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள இருளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று சர்வே செய்து உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில் கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 43 இருளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக கடந்த மாதம் சர்வே செய்யப்பட்டது. இதில் அரசு புறம்போக்கு நிலமாக இருந்ததை தற்போது நத்தம் புறம்போக்கு நிலமாக வகைப்பாடு மாற்றப்பட்டு அனைத்து கோப்புகளும் தயார் நிலையில் உள்ளன.

இதனையடுத்து அப்பகுதியில் வசித்து வரும் இளைஞர்களுக்கு இலவசை வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மானுவேல்ராஜ், வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம், துணை வட்டாட்சியர் ஏழுமலை ஆகியோர் அப்பகுதிக்கு சென்று திடீர் என்று ஆய்வு செய்தனர்.

இதில் வீடு வீடாக சென்ற அதிகாரிகள் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் உள்ள ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மின்சார அடையாள அட்டை, வீட்டு வரி, இருளர் ஜாதி சான்று உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரி பார்த்தனர் அப்போது வண்டலூர் வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர் பொன்னுதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்

Tags:    

Similar News