தா. பழூர் ஒன்றிய கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தந்தை பெரியார் கூட்டரங்கில் ஒன்றிய தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் மற்றும் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் செலவின கணக்கு வழக்குகள் மற்றும் தீர்மானங்களை கணக்கர் பாக்கியராஜ் வாசித்தார். இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வேளாண்மை துறை இணை இயக்குநர் அசோகன் கலந்து கொண்டு வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் பயன்கள் குறித்தும், உழவன் செயலி மூலம் விவசாயிகள் எவ்வாறு பயன் அடையலாம் என்று கூறினார். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர் யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் தட்டுபாடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் உரங்கள் கொரோனா ஊரடங்கால் உற்பத்தி தடைபட்டு இருந்ததால் இந்த தட்டுப்பாடு என்றும் இது விரைவில் சரியாகும் என்றும் கூறினார்.
ஒன்றிய தலைவர் மகாலட்சுமி கூறும்போது பெண்குழந்தைகள் மீதான பாலியல் புகார், ஆதரவற்ற குழந்தைகள் இருந்தால் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அவர்களை பாதுகாக்கும் பொருட்டு தகவல் தந்து அவர்களை பாதுகாக்கவேண்டும். மேலும் குழந்தை திருமணம் போன்ற புகார்களுக்கு 1098 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் சமதர்ம சுத்த சன்மார்க்கத்தை நிறுவிய வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5 அருட்பெரும் கருணை நாளாக அறிவித்ததற்க்கும்,தமிழ்த்தாய் வாழ்த்து நீராரும் கடலுடுத்த என்னும் பாடலை மாநில அரசு பாடலாக அறிவித்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை கூறியதன் பேரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நிறைவாக ஒன்றிய குழு துணைத் தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.