விளை பொருட்களை சாலைகளில் உலர்த்திய விவசாயிகள்
உடையார்பாளையம் பகுதியில் விளை பொருட்களை சாலைகளில் உலர்த்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க உலர்களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதி விவசாய பகுதியாகும். இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடலை, எள், உளுந்து, மக்காச்சோளம், ராகி, கம்பு மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். வயல்களில் விளையும் விளை பொருட்களை அறுவடை செய்து, அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் காய வைத்து, தானியங்களை பிரித்து எடுக்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, இரவு நேரங்களில் சாலையில் வரிசையாக உள்ள தானிய போர்கள் தெரியாமல், அவற்றின் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கு உள்ளாவதும் அவ்வப்போது நடக்கிறது. கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையில் தமிழக அரசு பல்வேறு கிராமங்களில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு உலர்களங்களை அமைத்து கொடுத்தது. அவ்வாறு அமைக்கப்பட்ட களங்களும், தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பல்வேறு கிராமங்களிலும் களம் அமைக்கப்படவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது. எனவே அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உலர்த்தும் வகையில் உலர்களம் அமைத்துத்தர வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.