தா. பழூரில் விவசாயிகளுக்கு முழு மானிய விலையில் மரக்கன்றுகள் வினியோகம்
தா. பழூரில் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன்கூடிய மரக்கன்றுகளை சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் வழங்கினார்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகளுக்கு முழு மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உழவன் செயலி மூலம் தேக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில்
நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள்தான், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று கொண்ட போதெல்லாம் வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக உள்ளது. அந்த வகையில் இந்தியாவிலேயே விவசாயிகளின் நலன் கருதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் அறிவித்தது தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலின் அவர்களையே சாரும் என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முன்னதாக கூட்ட அரங்கில் வேளாண்துறை சார்பில் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் என கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.