அரியலூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதியை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பு அலுவலர் அனில் மேஸ்ராம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
அரியலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பு அலுவலர் அனில்மேஸ்ராம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை, குருவாலப்பர்கோவில் கிராமத்தில் பொதுப்பணித்துறை நீர்வளஆதாரத்துறை மருதையாறு வடிநிலக்கோட்டம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் பொன்னேரியினை நேரில் சென்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஸ்ராம், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 2வது பாசன மதகு பணிகளை விரைந்து முடித்து, கரைகளை முறையாக பலப்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் 103 மி.மீ மழை பதிவாகிவுள்ள பாப்பாக்குடி ஊராட்சி படைநிலை கிராமத்திலுள்ள செங்கராயன் ஓடையில் கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கேற்பட்டுள்ளதால், படைநிலையிலிருந்து கோவில் வாழ்க்கை செல்லும் சாலையில் தரைமட்ட பாலத்திற்குமேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தரைமட்ட பாலத்தின் இருபுறங்களிலும் காவல் துறையினர் மூலம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் நிரம்பியுள்ளதால் ஏரி, குளங்கள், வாய்க்கால்களில் பொதுமக்கள் மற்றும் தங்களது குழந்தைகள், கால்நடைகளை அழைத்து செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
வடக்கிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329-228709 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்திட வேண்டும். மேலும், பொதுமக்கள் பேரிடர் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் புகார்கள் TNSMART என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஸ்ராம் கூறினார்.
இந்தஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், உடையார்பாளையம் கோட்டாச்சியர் அமர்நாத், உதவிசெயற்பொறியாளர் சாந்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் சென்றிருந்தனர்.