ஜெயங்கொண்டம்: மயானத்திற்கு செல்ல வழித்தடம் கேட்டு சடலத்துடன் மறியல்
ஜெயங்கொண்டம் அருகே, மயானத்திற்கு வழித்தடம் அமைத்து தரக்கோரி, சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உரிய வழித்தடம் இல்லாததால் விவசாய நிலத்தின் வழியாக சென்று உடலை அடக்கம் செய்து வந்தனர். சடலத்தை எடுத்துச் செல்லும்போது பயிர்கள் பெருமளவில் சேதம் அடைவதை கருத்தில்கொண்டு வயலின் உரிமையாளர் சடலத்தை எடுத்துச் செல்ல மறுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் தா.பழூர், இடங்கண்ணி சாலையில் சடலத்தை சுமந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் நிரந்தர வழித்தடம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மயானத்திற்கு செல்ல பாதை அமைத்துத் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.